“விஜய் இடத்துல ரஜினி இருந்திருக்கணும்..!” லதா ரஜினிகாந்த் ஓபன் டாக்: ரசிகர்கள் அதிர்ச்சி…!

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

நடிகர் விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினி கொடுத்த ஆதரவு குரல் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்ததில் இருந்தே, அவர் நேரடியாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் 90களிலிருந்தே வலியுறுத்தி வந்தனர். பல வருட எதிர்பார்ப்பிற்குப் பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘சிஸ்டத்தை மாற்ற ஆன்மீக அரசியல் செய்யப் போவது உறுதி’ என அறிவித்து ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தார்.

இருப்பினும், அந்த அறிவிப்பை வெளியிட்ட சில மாதங்களிலேயே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கினார். இதற்கிடையே, கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜய் தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானதை கவனித்த ரஜினி ரசிகர்கள், விஜய் இருக்கும் இடத்தில் ரஜினி இருந்திருக்க வேண்டியது என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், ரஜினிகாந்த் அரசியல் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

அந்தப் பேட்டியில், ரஜினிகாந்த் 2021ல் அரசியலுக்கு வராதது ஒரு மிகப்பெரிய இழப்பு என்றும், அதற்காகத் தான் சற்று வருத்தப்பட்டதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்திற்குள் நாட்டை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது குறித்துப் பல திட்டங்களும் கனவுகளும் இருந்தன என்றும், சிங்கப்பூரின் லீ குவான் யூ செய்தது போன்ற ஒரு தொலைநோக்குப் பார்வை அவரிடம் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாகக் கோவிட் காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலை காரணமாகவே அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்ற முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்றும், ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்துவிட்டோம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.