வீட்டில் தனியாக இருந்த பெண்.. திடீரென நீட்டப்பட்ட துப்பாக்கி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்…. நாமக்கல்லில் நடுக்கத்தை ஏற்படுத்திய கொள்ளை சம்பவம்..!!

By Muthu Mani on ஆனி 14, 2026

Spread the love

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள பட்டணம் அம்மன்கோயில் தோட்டத்தில் தனியாக கலைச்செல்வி என்ற பெண் வசித்து வருகிறார். கணவரை இழந்த கலைச்செல்வி கடந்த 11 ஆம் தேதி மாலை ராசிபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டுக்கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த இரு மர்மநபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்ற அவரின் வாயைத் துணியால் அடைத்த கொள்ளையர்கள், ஒருவன் துப்பாக்கியைத் தலையிலும், மற்றொருவன் கத்தியைக் கழுத்திலும் வைத்து மிரட்டி வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.20,000 பணம் மற்றும் கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் ஆகியவற்றை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு தப்பினர். மகள் கொடுத்த தகவலின் பேரில் ராசிபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

கலைச்செல்வி மகள் வீட்டிலிருந்து திரும்பிய போதே கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்து, சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்து இந்தத் துணிகரக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்மநபர்களைப் பிடிக்கத் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ராஜகுகன் மற்றும் அஜித்குமார் ஆகிய இரு வாலிபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து 9½ சவரன் நகைகள், கள்ளச்சந்தையில் வாங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர்; இவர்கள் கலைச்செல்வியின் மருமகன் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனத்தில் வேலை கேட்பது போல நடித்து நோட்டமிட்டே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.