இதோ வந்துவிட்டது குட் நியூஸ்!.. அரசுப் பள்ளி காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?.. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த ‘பளீச்’ பதில்..!!

By Muthu Mani on ஆனி 14, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ. ராஜ்மோகன் தமிழ்நாட்டின் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் இன்று மாலை தொடங்கப்பட உள்ள அரசுப் பொருட்காட்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், காந்தி மியூசியம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் புதுப்பிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, விரைவில் அவை புதிய பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்கள் நீதிமன்ற வழக்குகளின் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர் விரைவாக நிரப்பப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உணவுத் தரம் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்த எந்தக் காரணத்திற்காகவும் உடற்கல்வி நேரத்தை ரத்து செய்யக் கூடாது எனப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

   

மேலும், மாணவர்களிடையே ஏற்படும் ஒழுக்கப் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க மனநல ஆலோசனை மற்றும் தன்முனைப்பு பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இது போன்ற புகார்கள் மேலும் வந்தால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார். அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பள்ளி இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளை ஆய்வு செய்யச் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.