திமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் கண்ணீர்விட்டு அழுதபடி தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ள சம்பவம் கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிந்தைய சூழலில், கட்சியின் கள ஆய்வு முகமை திரட்டிய தகவல்கள் மற்றும் நிர்வாகிகள் ராஜினாமா செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தங்களால் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உழைக்கக்கூடிய தெம்பு இல்லை என்றும், அடிமட்டத் தொண்டர்களின் புலம்பல்களை அறிவாலயத்தில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மதிக்கவில்லை என்றும் விலகியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியே இந்த ஒட்டுமொத்த ராஜினாமாக்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த அடுத்தடுத்த அதிரடி விலகல்கள் காரணமாக திமுக உட்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
