சாகும்போது கூட உன்னை பிரிய மாட்டேன்.. 45 ஆண்டு கால காதலை மரணத்திலும் நிரூபித்த தஞ்சை தம்பதி.. உருக வைக்கும் பின்னணி…!!

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்ப சாவடியைச் சேர்ந்த 70 வயது செல்வராஜ் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர் 45 ஆண்டுகள் தம்பதியராக இணைந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக செல்வராஜ் அவதிப்பட்டு வந்த நிலையிலும், அவரது மனைவி சித்ரா அவரை அன்போடு அரவணைத்துப் பராமரித்து வந்துள்ளார். இவர்களது அன்யோன்யமான வாழ்க்கை அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், செல்வராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 45 ஆண்டுகள் நிழல் போலத் தொடர்ந்த கணவரின் பிரிவு அந்த குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

   

கணவர் உயிரிழந்த துயரச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டில் அழுதுகொண்டிருந்த சித்ரா, அடுத்த சில நிமிடங்களில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணத்திலும் பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்த இந்த தம்பதியினரின் பாசம், அவர்களது உறவினர்கள் மற்றும் ஒட்டுமொத்த தஞ்சை மக்களையும் பெரும் சோகத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.