“300 பில்லியன் டாலர் கேட்ட ஈரான்… கொந்தளித்த டொனால்ட் ட்ரம்ப்… ஜெனீவா ஒப்பந்தத்தில் திடீர் திருப்பம்…!!”

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர, நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா 300 பில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்சத் திட்டத்தை ஈரான் அரசு ஊடகங்கள் கசியவிட்டுள்ளன. மேலும், ஹார்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் ஈரான் வசம் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த வார இறுதியில் ஜெனீவா செல்லவிருந்த நிலையிலேயே இந்த நிபந்தனைகள் கசிந்துள்ளன.

ஈரானின் இந்த நிபந்தனைகளால் கடும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த முன்மொழிவை “பலவீனமானது மற்றும் பரிதாபகரமானது” என்று கூறி முற்றிலுமாக நிராகரித்துள்ளார். ஈரான் நிர்வாகம் திருந்தி செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ள அவர், ஈரான் ஊடகங்களில் வெளியான போலிச் செய்திகளுக்கும், உண்மையில் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஈரானுடன் நேர்மையாக நடந்துகொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் கொந்தளித்துள்ளார்.

   

முன்னதாக, ஈரானுடன் ஒரு சிறந்த ஒப்பந்தம் செய்துகொண்டதாக ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தகவல் கசிந்ததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று ஜெனீவாவில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். வியாழன் மாலை நிலவரப்படி ஈரானின் உயர்மட்ட அளவில் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஜெனீவா ஒப்பந்தம் குறித்து ஈரான் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.