“24 வயது பெண் ரயிலில் அனுப்பிய கடைசி வீடியோ”… ஜூன் 5-க்கு பின் நடந்த நெஞ்சை பதறவைக்கும் உண்மை… அம்மா கால்களை பிடிக்க, தாத்தா செய்த கொடூரம்…!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான கௌரவக் கொலை, அந்தப் பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது. தும்பாலா ஹரிணி என்ற 24 வயது பட்டதாரி பெண், அரசுப் பணித் தேர்வுகளுக்காக ஹைதராபாத்தில் படித்து வந்தபோது நாகேந்திரா என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான ஹரிணி, தனது கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ முடிவெடுத்து விவாகரத்து கோரியுள்ளார். மகளின் இந்த முடிவால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், விவகாரத்தைச் சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி அவரைச் சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளனர்.

   

சொந்த ஊருக்கு ரயிலில் பயணித்தபோதே தன் குடும்பத்தினர் மீது ஹரிணிக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர் தனது காதலனுக்கு உருக்கமான செல்ஃபி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “விவாகரத்து குறித்துப் பேசவே என்னை ஊருக்குக் கூப்பிடுகிறார்கள்; ஆனால் எனக்கு அவர்கள் மீது நம்பிக்கையில்லை. ஜூன் 5-ஆம் தேதிக்குள் நான் ஹைதராபாத் திரும்பாவிட்டாலோ அல்லது என் செல்போன் அணைக்கப்பட்டிருந்தாலோ எனக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அர்த்தம், உடனே என் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்” என்று தீர்க்கமாகப் பேசியுள்ளார். அவர் பயந்தபடியே, ஊருக்கு வந்த அன்று நள்ளிரவிலேயே தாய் கால்களைப் பிடித்துக் கொள்ள, தாத்தா இரும்புக் கம்பியால் தலையில் அடித்து ஹரிணியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

   

கொலைக்குத் துணைபோன கணவர் மற்றும் குடும்பத்தினர், ஹரிணி மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடி, போலீசாருக்குத் தெரியாமல் உடலையும், ரத்தக் கறை படிந்த துணிகளையும் அவசர அவசரமாகத் தகனம் செய்து ஆதாரங்களை அழித்துள்ளனர். இதற்கிடையில், ஹரிணி சொன்ன கெடு தேதி முடிந்தும் அவர் வராததாலும், செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாலும் பதற்றமடைந்த காதலன் நாகேந்திரா, ஜூன் 6-ஆம் தேதி ஆந்திர காவல் துறையின் “சக்தி” (Shakti App) செயலி மூலம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அத்துடன், ஹரிணி தனக்கு அனுப்பிய அந்த செல்ஃபி வீடியோவையும் மிக முக்கிய ஆதாரமாக அதனுடன் இணைத்து அனுப்பினார்.

 

இந்த வீடியோ ஆதாரத்தைப் பார்த்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக ஸ்ரீகாகுளம் போலீசாருக்கு அவசர உத்தரவு பிறப்பித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய குடும்பத்தினர் இறுதியாகக் கொலையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஹரிணியின் தாய் விஜயகுமாரி, தாத்தா பாலு மற்றும் கணவர் வெங்கடேஸ்வர்ராவ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய இரும்புக் கம்பியையும் பறிமுதல் செய்தனர். தொழில்நுட்பத்தின் உதவியும், அந்தப் பெண்ணின் சமயோசிதமான வீடியோவும் இல்லையென்றால், இந்த கொடூரக் கொலை ஒரு சாதாரண மாரடைப்பு மரணமாகவே மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.