“வெறும் 730 ரூபாய் சேதத்திற்கு 4 ஆண்டுகள் சிறையா..?” – 25 ஆண்டுகளுக்குப் பின் வந்த அதிரடி தீர்ப்பு…!

By Swetha on ஆனி 12, 2026

Spread the love

கடந்த 2001-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் சிலரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, நீதிமன்ற வளாகத்திற்குள் கலவரம் வெடித்தது. அங்கு திரண்டிருந்தவர்கள் கற்களை வீசி, அங்கிருந்த அறிவிப்புப் பலகை மற்றும் மூன்று நீதிமன்ற அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த வன்முறையின் போது ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு வெறும் ரூ. 730 மட்டுமே என்று பொதுப்பணித் துறை மதிப்பீடு செய்தது. மேலும், இக்கலவரத்தைத் தடுக்க முயன்ற காவல் ஆய்வாளர் ஒருவர் மீதும் கல் விழுந்ததில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக திமுகவினர் மீது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் மற்றும் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

   

இந்த வழக்கில் 2001-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எம். உதயவேலவன் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட மாறன் (57), எஸ். கணேசன் (58), பி. கோபாலகிருஷ்ணன் (66) ஆகிய மூன்று பேருக்கும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதச் சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.