வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்.. 30% எத்தனால் பெட்ரோலுக்கு முழு வரிவிலக்கு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

By Muthu Mani on ஆனி 11, 2026

Spread the love

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவிலும் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கவும், மாற்று எரிபொருளை ஊக்குவிக்கவும் 22% முதல் 30% வரை எத்தனால் கலக்கப்படும் பெட்ரோல் வகைகளுக்கு மத்திய கலால் வரியில் இருந்து முழு விலக்கு அளிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியத் தர நிர்ணய அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு இந்த வரிவிலக்கு பொருந்தும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 20% வரையிலான எத்தனால் கலப்பிற்கு மட்டுமே வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த வரம்பு 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு எத்தனால் உற்பத்தியைப் பெருக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அதிரடி வரிக்குறைப்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முடிவு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை வேகப்படுத்தும் என்றாலும், சந்தையில் இது சில புதிய விவாதங்களையும் சவால்களையும் கிளப்பியுள்ளது.

   

குறிப்பாக, அதிகளவில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது வாகனங்களின் எஞ்சின் மற்றும் நீண்டகால செயல்திறனை (Engine Performance) பாதிக்கக்கூடும் என்ற விமர்சனங்கள் வாகன நிபுணர்கள் மற்றும் பொதுமக்களால் முன்வைக்கப்படுகின்றன. மற்றொருபுறம், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இரு மகன்கள் எத்தனால் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தங்களின் சொந்த லாபத்திற்காகவும் குடும்ப நலன்களுக்காகவுமே மத்திய அரசு எத்தனால் பெட்ரோலை மக்கள் மீது கட்டாயமாகத் திணிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.