பிரபல தமிழ் நடிகை யாஷிகா ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரைக் குறித்துத் தான் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பரவி வரும் ஸ்கிரீன்ஷாட்டை முற்றிலும் மறுத்து விளக்கமளித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், “இணையத்தில் உலா வரும் அந்த ஸ்கிரீன்ஷாட் முழுக்க முழுக்க எடிட் செய்யப்பட்ட ஒரு போலிப் படம் என்றும், அது முற்றிலும் கற்பனையான கதை என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். வதந்திகளைப் பரப்புபவர்கள் இதுபோன்ற செயல்களை உடனே நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த கடற்கரை போட்டோஷூட் வீடியோ ஒன்றைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘இதற்கு முதல்வர் விஜய் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு யாஷிகா ஆனந்த் தரப்பிலிருந்து, ‘அவர் த்ரிஷாவுடன் பிஸியாக இருப்பார்’ எனப் பதிலளித்தது போன்ற ஒரு போலி ஸ்கிரீன்ஷாட் இணையவாசிகளால் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. இது விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் இப்போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தற்போது இந்த அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார்.
