“லஞ்சம் தரலனா இப்படியா பண்ணுவாங்க?.. சடசடவென கேட்ட எலும்பு முறிவு சத்தம்.. அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அரசு மருத்துவமனையில், லஞ்சம் தராததால் மாற்றுத்திறனாளி சிறுமியின் உடைந்த காலை மருத்துவரே மீண்டும் உடைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த ஏழைத் தாயான ரேஷ்மா என்பவரின் 14 வயது மகளுக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை ஊழியர்கள் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். வறுமையின் காரணமாக ரேஷ்மாவால் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க முடிந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இலவச சிகிச்சை உத்தரவையும் மீறி மீதிப் பணத்தைக் கேட்டு மருத்துவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பணம் தராததால் ஆத்திரமடைந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை அழைத்து அவரது முழங்காலை வலுக்கட்டாயமாக மடக்கியுள்ளார். அப்போது வலியால் சிறுமி அலறியதுடன், காலில் இருந்து எலும்பு முறியும் சத்தம் கேட்டதாக அவரது தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமி மனநலம் குன்றியவர் என்பதும், ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் இவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருந்தும் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

   

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தலைமை மருத்துவ அதிகாரி சுனில் திவாரி, சிறுமியின் தாயார் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மறுதரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இந்த விஷயத்தில் அவசரமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறியுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஏதேனும் தவறு அல்லது அலட்சியம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.