திருமணமாகாத இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வது, ஒரு நபரின் குணத்தைத் தவறாக மதிப்பிடுவதற்கான காரணமாக அமையாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் தேர்வர் ஒருவரின் பணி நியமனம், அவர் மீது இருந்த பழைய புகாரைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த இளைஞருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டு, சமூகப் பார்வையை மாற்றியமைக்கும் வகையிலான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு காவலர் பணிக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட அந்த இளைஞர் மீது, பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஒரு கிரிமினல் வழக்கு இருந்தது. எனினும், 2015-லேயே இந்த வழக்கு லோக் அதாலத் மூலம் இருதரப்பு சம்மதத்துடன் சமரசமாக முடிக்கப்பட்டது. அந்த இளைஞர் தனது வேலைக்கான விண்ணப்பப் படிவத்திலும் இந்த விவரங்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், “பெண்ணை ஏமாற்றியது ஒழுக்கக்கேடான செயல்” எனக் கூறி, தெலங்கானா காவலர் தேர்வு வாரியம் அவரது பணி நியமனத்தை தன்னிச்சையாக ரத்து செய்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், “திருமணமாகாத இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வதைத் தடுக்கும் சட்டம் இந்தியாவில் ஏதுமில்லை. எனவே, அத்தகைய உறவில் இருந்த காரணத்திற்காகவே ஒரு நபரின் குணாதிசயம் மோசமானது என்று முடிவு செய்ய முடியாது. ஒவ்வொரு உறவும் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியமில்லை; அது திருமணத்தில் முடியவில்லை என்பதற்காகவே, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை ஏமாற்றிவிட்டதாகக் கருத முடியாது” என்று தெளிவுபடுத்தினர். மேலும், மாறிவரும் சமூக யதார்த்தங்களை அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
வழக்கு லோக் அதாலத் மூலம் சமரசமாக முடிந்துவிட்ட நிலையில், புகாரளித்த பெண்ணே வழக்கை முடித்துக்கொள்ளச் சம்மதித்த பிறகு, காவலர் தேர்வு வாரியம் தானாக முன்வந்து அவர் ஏமாற்றப்பட்டார் என்று முடிவு செய்ய முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. வெறும் புகாரை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தள்ளுபடி செய்து, பாதிக்கப்பட்ட இளைஞருக்குப் பணி நியமனம் வழங்க வழிவகை செய்துள்ளனர்.
