சடலம் பெரம்பூரில், தலை செங்கல்பட்டில்… ரேபிடோ ஆட்டோவில் உடல் பாகங்களை கடத்திய பகீர் பின்னணி… கொலையாளி கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்து போன போலீஸ்….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ஓட்டேரி போலீஸார் இணைந்து தீவிர விசாரணையில் இறங்கினர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக் குமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீஸ் சார்பில் 2 தனிப்படைகளும் என மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

கொல்லப்பட்ட நபரின் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில், சடலத்தின் உடலில் இருந்த ஒரு ஷார்ட்ஸ் துணியின் பார்கோடு (Barcode) போலீசாருக்கு முக்கிய ஆதாரமாகக் கிடைத்தது. அதை ஆய்வு செய்தபோது, அது பெரம்பூர் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் கடையில் வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. அக்கடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த துணியை வாங்கிய இருவரின் தொலைபேசி எண்களைப் பெற்று போலீசார் தொடர்பு கொண்டபோது, ஒரு எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணின் கால் டேட்டா ரெக்கார்டுகளை (CDR) ஆய்வு செய்ததில், ஒரு பெண்ணுடன் அதிகளவில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.

   

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா (36) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கொடூரமாகக் கொல்லப்பட்டவர் அவரது கணவர் அமீர் அலி (37) என்பதும், அவர்கள் இருவரும் 2022 முதல் சென்னை தேனாம்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அமீர் அலிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில், தி.நகரில் காய்கறி கடை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் (31) என்பவருடன் ரோகிமாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

   

கணவனின் சித்ரவதை தாங்க முடியாமல், தங்களின் காதலுக்கு இடையூறாக இருக்கும் அமீர் அலியை தீர்த்துக்கட்ட ரோகிமாவும் அஷ்ரபும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 3ஆம் தேதி இரவு அமீர் அலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் மயங்கியதும் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை அடையாளம் தெரியாமல் மறைப்பதற்காக கை, கால்கள் மற்றும் தலைப் பகுதியைத் தனித்தனியாக துண்டு துண்டாக வெட்டிப் பைகளில் அடைத்துள்ளனர். கடந்த 5ஆம் தேதி காலை ரேபிடோ ஆட்டோ மூலம் அமீர் அலியின் உடல் பாகங்கள் இருந்த சூட்கேஸை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 5-வது பிளாட்பாரத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

 

மேலும், துண்டிக்கப்பட்ட அமீர் அலியின் தலைப் பகுதியை செங்கல்பட்டு பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்ததாக ரோகிமா வாக்குமூலம் அளித்தார். கைதான ரோகிமா அளித்த தகவலின் அடிப்படையில், செங்கல்பட்டு ஏரிப் பகுதியில் உள்ள புதருக்குள் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார், இறுதியாக அமீர் அலியின் தலையை இன்று மீட்டனர். பார்கோடு மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து, மிகக் குறுகிய காலத்தில் இந்த கொடூரக் கொலை வழக்கின் பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.