டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியை ஒருவர் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பேராசிரியை, கடந்த ஜூன் 4 அன்று கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் முடிவில், இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று மேற்கு வங்கம் சென்ற டெல்லி போலீஸ் குழுவினர், அங்கு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான ராம்பிரசாத் தாஸ் (42), அவரது மனைவி பனஸ்ரீ தாஸ் (36) மற்றும் அவர்களது கூட்டாளி ஒருவரைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் நடத்திய விசாரணையில், பேராசிரியை வசித்து வந்த அந்த வீட்டைத் தங்களுக்கு விற்றுவிடுமாறு அவர்கள் பேராசிரியையிடம் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், அவர் அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து, வீட்டை விற்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும், பேராசிரியையின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்திலும் இந்தத் தம்பதியினர் அவரைப் படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
