சென்னை திரு.வி.க நகர் சட்டசபை தொகுதியின் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்எல்ஏ பல்லவிக்கு, திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக பற்றி உண்மைக்கு புறம்பாகவும், அவதூறான வகையிலும் பேசியதாகக் கூறி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அடுத்த 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வக்கீல் நோட்டீஸுக்கு மிக முக்கிய பின்னணியாக ஒரு சமீபத்திய மோதல் சம்பவம் பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ரிப்பன் வெட்டுவது மற்றும் குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும், எம்எல்ஏ பல்லவிக்கும் இடையே மேடையிலேயே வாக்குவாதம் வெடித்தது. மேயர் பிரியா தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்தியதாக பல்லவி குற்றம்சாட்ட, “நான் புரோட்டோகால் (அரசு நடைமுறை) படிதான் செயல்பட்டேன், யாரையும் அவமதிக்கவில்லை” என்று மேயர் பிரியா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த அரசு விழா சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, அடுத்தப் பிரச்சினையாக இந்த வக்கீல் நோட்டீஸ் விவகாரம் உருவெடுத்துள்ளது. திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன், கட்சி உறுப்பினர் நடராஜன் மூலமாக இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். தவெக ஆட்சியைப் பிடித்த பிறகு சென்னை கொளத்தூர், ராயபுரம் மற்றும் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய எம்எல்ஏ பல்லவி, “திமுகவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, தவெக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு மின்வெட்டை உருவாக்குகிறார்கள்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
பல்லவி பேசிய இந்த வீடியோ இணையதளங்களில் மிக வேகமாகப் பரவியதை அடுத்து திமுக இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. பல்லவியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், திமுகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் உண்மைக்குப் புறம்பாகப் பேசப்பட்டவை என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே சென்னை அரசியல் களத்தில் அடுத்தடுத்து மோதல்கள் வெடித்து வருவது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
