அதிமுகவில் இளம் ரத்தங்கள்.. தவெகவில் ‘சீனியர்’ தர்பார்.. தடம் மாறும் எடப்பாடி, விஜய் வியூகம்..!!

By Soundarya on ஆனி 6, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் தொடர்ந்து கட்சி மாறி வருவது, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையிலும் அதிமுக தலைமை தற்போது திட்டமிட்டு வருகிறது. அதன்படி, கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய உட்கட்சி கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிமுக தீவிரமாகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

   

அதே நேரத்தில், ஆரம்பத்தில் இளைஞர்களை மட்டுமே அதிகளவில் கொண்டு தொடங்கப்பட்ட தவெக-வில், தற்போது அதிமுகவைச் சேர்ந்த 50 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். மூத்த அரசியல்வாதிகளின் இந்த அடுத்தடுத்த வருகையால், இளைஞர்களின் கூடாரமாக இருந்த தவெக, தற்போது மெல்ல மெல்ல ‘அடுத்த அதிமுக’வாக மாறி வருகிறதோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.