“தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம்”… 24 மணி நேரத்தில் 15 லட்சம் உறுப்பினர்கள்… அண்ணாமலை செய்யப்போகும் அந்த ஒரு சாதனை…!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி தனித்து களம் காண உள்ளார். கரூர் மாவட்டம், தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி – பரமேஸ்வரி தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டப்படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து, லக்னோவில் உள்ள புகழ்பெற்ற இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (IIM) எம்பிஏ பட்டமும் பெற்றார்.

காவல் பணியின் மீது கொண்ட ஈர்ப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் கவனம் செலுத்தி, கடந்த 2011-ஆம் ஆண்டு கர்நாடகா கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். கார்கலாவின் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்த அண்ணாமலையின் திறமையான நிர்வாகத்தால், அங்குள்ள காவல் நிலையங்கள் ISO தரச்சான்று பெற்றன. பின்னர் உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய போது, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுத்தல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளால் மக்களின் அன்பைப் பெற்று ‘கர்நாடகா சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். பின்னர் பெங்களூரு தெற்கு மாவட்ட துணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றார்.

   

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தனது ஐபிஎஸ் பதவியைத் திடீரென ராஜினாமா செய்த அண்ணாமலை, இயற்கை விவசாயம் மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டினார். ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்று வந்த அவர், தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் நோக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்த உடனேயே, அக்கட்சியின் தேசிய தலைமை அவருக்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் என்ற மிக முக்கியப் பொறுப்பை வழங்கி அழகு பார்த்தது.

   

2021 முதல் 2025 வரை பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றிய அண்ணாமலை, தமிழகத்தில் அக்கட்சியை அடிமட்டம் வரை கொண்டு சேர்க்க ‘என் மண் என் மக்கள்’ என்ற பிரம்மாண்ட பாத யாத்திரையை நடத்தினார். அண்ணாமலையின் நுணுக்கமான, வெளிப்படையான மற்றும் தெளிவான பேச்சுகள் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. இதனால் ஏராளமான இளைஞர்கள் கட்சியில் இணைந்ததோடு, அவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கியப் பொறுப்புகளை வழங்கி, இளைய தலைமுறையினரை அரசியல் களத்தில் அண்ணாமலை ஊக்குவித்தார்.

 

அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் வெளியிட்ட ‘DMK Files’ ஊழல் மற்றும் சொத்துப் பட்டியல் விவகாரம், அகில இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் களங்களைப் பொறுத்தவரை, 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் நேரடியாகச் சந்திக்கும் அளவிற்கு தேசிய தலைமையின் மிக நெருக்கமான நம்பிக்கைக்குரியவராக அண்ணாமலை திகழ்ந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், அண்ணாமலை இத்தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார். மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி சார்ந்த முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. தமிழக பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அண்ணாமலை தனது பதவியையும், கட்சி உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியதை அடுத்து, பாஜக தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது.

தற்போது பாஜகவில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ள அண்ணாமலை, தனது தனித்துவமான அரசியல் பாணியில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி தமிழக அரசியலில் தனித்து களம் காணத் தயாராகி வருகிறார். ஐபிஎஸ் அதிகாரி, பாஜக மாநிலத் தலைவர் எனப் பல கட்டங்களைக் கடந்து வந்துள்ள அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வும், தனிப்பாதையும் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் இருந்து அதிரடியாக விலகி தனது புதிய இயக்கமான ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டார். புதிய இயக்கம் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதில் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அண்ணாமலை தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இயக்கம் தொடங்கப்பட்ட வெறும் 10 மணி நேரத்திலேயே 10 லட்சம் பேரைத் தாண்டிய உறுப்பினர் சேர்க்கை, தற்போது 13 லட்சத்தை எட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேராதரவு தனக்கு பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது புதிய பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இதுவொரு தனி மனிதனுடைய பயணம் கிடையாது; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும் நீங்கள் அளித்து இருக்கும் ஆதரவில் எதிரொலிக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் நம்பிக்கையை மதித்து நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த பயணத்தை முன்னெடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி, அவரது ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அண்ணாமலையின் இந்த புதிய முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் தற்போது அண்ணாமலையின் புதிய இயக்கத்தை நோக்கித் திரும்பியுள்ளது.

மறுபுறம், அண்ணாமலையின் இந்த முடிவிற்கு பாஜக தரப்பில் இருந்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன. பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையின் இயக்கத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் பாஜகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், “பாஜக இப்போதும் பலமாகவே உள்ளது; அண்ணாமலைக்கு கட்சியில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால், அதை அவர் முன்பே சொல்லி இருக்கலாம்” என்று விமர்சித்துள்ளதோடு, திரும்பி வருபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக புதிய இயக்கம் தொடங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்களை நெருங்குகின்றார் அண்ணாமலை. இது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒரு மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.