தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… அதிருப்தியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகள்… சிக்கலில் முதலமைச்சர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் கட்சி இரண்டாகப் பிரிந்தது. எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர். இதில் வேலுமணி தரப்பினர் ஆரம்பத்தில் முதலமைச்சர் விஜய்யின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்களின் கட்சி பதவிகள் எடப்பாடியால் பறிக்கப்பட்டன. இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனிடம் தனித்தனியாகக் கொறடாக்களை நியமிக்க மனு அளித்து வந்த நிலையில், வேலுமணி அணியின் 6 எம்.எல்.ஏக்கள் தவெக-வில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக இரு அணிகளும் சமரசம் பேசி ஒன்றிணைந்ததுடன், விஜய்க்கு அளித்த ஆதரவையும் வேலுமணி தரப்பு கடிதம் மூலம் திரும்பப் பெற்றது.

அதிமுகவின் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்தைச் சந்தித்து தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி. சம்பத், என்.ஆர். சிவபதி, கடம்பூர் ராஜா ஆகியோருடன், முன்னாள் எம்.எல்.ஏக்களான கோவிந்தசாமி, சுந்தரராஜ், மான்ராஜ், ராஜவர்மன், பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெக-வில் இணைந்துள்ளது மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் திடீர் நகர்வு அதிமுகவின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியையும், அதிமுக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

   

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் இந்த வரவு தமிழக வெற்றி கழகத்தை மாநில அரசியலில் மேலும் ஒரு வலுவான சக்தியாக மாற்றும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. எனினும், தவெக-வில் இணைந்துள்ள இந்த மூத்த அதிமுக தலைவர்களுக்கு கட்சியில் முக்கியப் பதவிகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டால், அதனை தவெக-வின் ஆரம்பகால நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற புதிய சிக்கலும் எழுந்துள்ளது. இந்த உட்கட்சி சவாலை முதலமைச்சர் விஜய் எவ்வாறு கையாண்டு சமரசம் செய்யப் போகிறார் என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.