தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. குறிப்பாக, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் இருமுறை போட்டியிட்ட முக்கிய முகமான கஜா என்கிற கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுவாக மக்கள் ஆளுங்கட்சியை நோக்கித்தான் செல்வார்கள் என்றும், ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலும் இவ்வளவு பேர் தேடி வருவது பதவிக்காக அல்ல, இழந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், 1976-ல் எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியை இழந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், திமுக வெற்றியைக் கண்டு வெறி கொள்வதும் இல்லை, தோல்வியைக் கண்டு துவண்டு போவதும் இல்லை எனத் தொண்டர்களுக்கு தைரியம் ஊட்டினார்.
தொடர்ந்து தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைத்துள்ள புதிய ஆட்சி, உண்மையில் திமுக கூட்டணியின் தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற ஒரு முக்கியப் பொடியை வைத்தார். தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கச் சென்றபோது, தன்னிடம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், அது அவர்களின் ஜனநாயக உரிமை என்பதால் தான் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை என்றார்.
கூட்டணிக் கட்சிகளைத் தான் வழியனுப்பி வைத்ததற்குக் பின்னால் உள்ள அரசியல் காரணத்தையும் அவர் வெளிப்படையாக உடைத்தார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்றும், அதன் மூலமாக பாஜக உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். இறுதியாக, “நம்முடைய தயவில் அமைந்திருக்கும் இந்த தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவிலேயே நாம் பணியாற்ற உறுதியெடுத்துக் கொள்வோம்” எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின், திமுகவில் இணைந்துள்ள கஜேந்திரன் இனி கழகத்திற்கு விசுவாசமாகப் பணியாற்றுவார் என நம்புவதாகவும் கூறி முடித்தார்.
