உதயநிதி செய்த அந்த ஒரு தவறு… “மே 4 மாலை நடந்த ரகசிய பேரம்”… –திமுகவின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ் எம்பியின் எக்ஸ் பதிவு….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்த்தது. இதனால் அதிருப்தியடைந்த திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’, ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. ராகுல் காந்தி தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் என்றும், காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி புதைக்கும் செயலைச் செய்கிறார் என்றும் முரசொலி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தற்போது மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

   

முரசொலியின் விமர்சனங்களுக்கு தனது எக்ஸ் (X) பக்கத்தில் சாட்டையடி பதிலடி தந்துள்ள மாணிக்கம் தாகூர், “2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் வெறும் 59 இடங்களுக்குக் குறைத்தது ஏன் என்பதைப் பற்றி திமுக தலைமை சிந்தித்ததா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை சுயபரிசோதனை செய்து ஆராய்வதற்குப் பதிலாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது திமுக தன் தோல்வியை மறைக்கப் பார்க்கும் ஒரு வெற்று முயற்சியாகவே தெரிகிறது என்று அவர் சாடியுள்ளார். மேலும், கடந்த காலத்தில் கலைஞர் இருந்தபோது தோல்விகளை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக்கொண்டு மீண்டு வந்ததாகவும், ஆனால் இன்றைய திமுகவிற்கு அந்த அரசியல் நாகரிகம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

திமுக அரசின் மீதான மக்களின் அதிருப்தியே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைத் தெளிவுபடுத்திய தாகூர், ‘திராவிட மாடல்’ என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, அது ஒரு “கமிஷன் மாடல்” அரசியல் என்று மக்கள் உணர்ந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம் மற்றும் அதிகார அகந்தைக்கு எதிராகவே வாக்களித்துள்ளார்கள். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலைக்குக் கிடைத்த அரசியல் தண்டனையே இந்தத் தோல்வி என்றும், இதற்குத் தோழமைக் கட்சிகள் மீது விஷ வார்த்தைகளைக் கக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

 

இறுதியாக, கொள்கைக்காக வாழும் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மையைப் பற்றிப் பேச திமுகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். மே 4-ஆம் தேதி மாலை, பாஜகவை வெளியில் எதிர்ப்பதாகப் பேசிக்கொண்டே, உள்ளே அதிமுக மற்றும் பாஜகவுடன் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்னென்ன? என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டதாக அவர் அம்பலப்படுத்தியுள்ளார். வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு பேரமும் நடத்தும் இரட்டை வேட அரசியலை நிறுத்திக்கொண்டு, மக்களின் தீர்ப்பை மதித்து திமுக சுயபரிசோதனை செய்யாவிட்டால், அவர்களின் வீழ்ச்சி மேலும் வேகமடைவதைத் தடுக்க முடியாது என்று எச்சரித்து தனது கண்டனப் பதிவை முடித்துள்ளார்.