நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுருளை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய முத்துக்குமார் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி முருகனின் 18 வயதுடைய மகள் வித்யாவும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி மாணவியான வித்யாவின் காதலுக்கு அவரது தந்தை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே 20-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, சுருளை கிராமத்தில் உள்ள முத்துக்குமாரின் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
முத்துக்குமார் தனது கிராமத்தில் தனியாக ஒரு புதிய வீட்டைக் கட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவில், முத்துக்குமாரும் வித்யாவும் தங்களது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஆத்திரமடைந்த தந்தை முருகன், முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் வீட்டின் கதவைச் சரமாரியாக வெட்டியதோடு, ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதற்குள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இதில் வீடு தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மூலைக்கரைப்பட்டி போலீசார், முருகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குப் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
