தொழில்நகரமாக விளங்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரம் டெல்லுக்கு அருகாமையில் உள்ளதால், பல்வேறு வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான சூழலில், நொய்டாவின் செக்டார் 74 பகுதியில் உள்ள ‘Ivy County’ என்ற 28 மாடிக் குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. காலை சுமார் 8 மணியளவில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் உட்பகுதியில் திடீரெனத் தீப்பிடித்தது. இந்தத் தீ மிக வேகமாகப் பரவியதை அடுத்து, ஜன்னல் வழியே விண்ணை முட்டும் அளவிற்குப் பயங்கரமான கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதையும் சூழ்ந்துகொண்டது.
தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு வளாகம் முழுவதும் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. மேல் தளங்களில் வசிப்பவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல், தங்களது குடும்பத்தினருடன் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறி கீழே ஓடி வந்தனர். விபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் பல மணி நேரம் கடுமையாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து குடியிருப்புவாசிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
இந்த விபத்து நடந்து அடுத்த 15 நிமிடங்களிலேயே, நொய்டாவின் செக்டார் 52-ல் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்திலும் அடுத்தடுத்து தீவிபத்து ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு உணவகமும், மேல் தளங்களில் மாணவர்கள் தங்கும் விடுதியும் (Hostel) செயல்பட்டு வந்தன. இங்கும் தீவிபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சாதுரியமாகச் செயல்பட்டுத் தீயை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்லவேளையாக இந்த இரண்டாவது விபத்திலும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. முன்னதாக டெல்லியில் உள்ள ஒரு விடுதி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், நொய்டாவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை தீவிபத்துச் சம்பவங்கள் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
