ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை நிறுத்த மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, தகுதியற்றவர்களைக் கண்டறியும் டிஜிட்டல் சரிபார்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் பான் கார்டு மற்றும் குடும்ப விவரங்களை வருமான வரித் துறையின் தரவுகளுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்த்து வருகின்றன. இந்தச் சரிபார்ப்பின்படி, நுகர்வோர் அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் ஆண்டு வரிக்குட்பட்ட வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டியிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படுகிறது. இந்தத் தகவல் தவறானது என நுகர்வோர் கருதினால், குறுஞ்செய்தி கிடைத்த 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது 1800-2333-555 என்ற கட்டணமில்லா எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது புகாரைப் பதிவு செய்ய வேண்டும்; தவறும்பட்சத்தில் மானியம் நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பிரிவைச் சேர்ந்த சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.24.50 மட்டுமே மிகக் குறைந்த தொகையாக மானியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கும் வருமான வரி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் கையாளுவது வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் கிடையாது என்ற விதிமுறை கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டாலும், இதுவரை அது வாடிக்கையாளர்களின் சுயபிரகடன (Self-declaration) அடிப்படையிலேயே பெரும்பாலும் இயங்கி வந்தது. ஆனால், தற்போது தானியங்கி தொழில்நுட்பம் மூலம் வருமான வரித் தாக்கல் (ITR) பதிவுகளோடு எரிவாயு இணைப்புகள் நேரடியாகப் பொருத்தப்படுவதால், தகுதியற்றவர்கள் துல்லியமாக அடையாளம் காணப்படுகின்றனர். இந்தத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக, தங்களுக்கு வந்த குறுஞ்செய்தி குறித்த சந்தேகங்களைத் தீர்க்கவும், விவரங்களை புதுப்பிக்கவும் பொதுமக்கள் தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் முகமைகளை நோக்கிச் படையெடுத்து வருகின்றன.
