தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (ஜூன் 4) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு மீண்டும் காவிப் பூச ஆரம்பித்துவிட்டார்கள் என்றும், ஆனால் அதைப் பற்றிப் பேச வக்கில்லாமல் பயந்து இன்றைக்கு ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கைச் சீராகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு மோசமான சூழல் நிலவி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், மக்கள் சந்தித்து வரும் அவதிளையும் சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனங்களை உதயநிதி ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பதிவு செய்துள்ளார்.
