ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் தலைமைச் செயலகத்தில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே பணியில் இருந்தபோது 3 பெண்களைக் காதலித்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில் சுதாகர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், கணவரைப் பிரிந்து வாழும் அந்தப் பெண்ணுடன் சுதாகருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அந்தப் பெண் கிராமத்தின் புறநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் வந்த சுதாகர் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீனு ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் பெண்ணின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பெண் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துத் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
ஆனால், காமவெறி அடங்காத சுதாகர் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கே வந்து, அவரை மறுபடியும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், உடனடியாகக் காவல் அவசர எண் 100-க்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நகரிக்கல்லு போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதைக் கண்ட சுதாகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சகோதரர்கள் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
