“மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே வந்துருச்சா?”…. விஜய் ஆட்சியில் அரங்கேறிய அந்த ‘மேற்கு வங்க’ மாடல்…. திமுகவின் ‘X’ பக்க பதிவால் தமிழ்நாட்டில் வெடித்த அரசியல் போர்க்களம்…!

By Nanthini on ஆனி 4, 2026

Spread the love

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசு அமைந்து ஒரு மாதமே நிறைவடைந்துள்ள நிலையில், அதன் செயல்பாடுகள் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி திமுக தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “மதச்சார்பற்ற, மாநில உரிமைகளைக் காக்கும் ஓர் அரசு அமையவே ஆதரவு தருகிறோம்” என்று கூறி தவெக-விற்குத் துணை நின்ற கூட்டணிக் கட்சிகளின் முகத்தில், ஒரே மாதத்தில் இந்த அரசு ஒரு லோடு கரியைப் பூசிவிட்டதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

   

திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சியான அதிமுக இரண்டாக உடைக்கப்பட்ட விவகாரம் கடுமையாகச் சாடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதும், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் உடனடி அங்கீகாரம் அளிப்பதும் மேற்கு வங்கத்தில் பாஜக செய்த ஜனநாயக விரோதச் செயல்களை நினைவூட்டுவதாக திமுக கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஒருபடி மேலே சென்று, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கே வாங்கி இந்த ஜனநாயகக் கேலிக்கூத்தை நடத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

   

மேலும், மதச்சார்பின்மை மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த விவகாரங்களிலும் தவெக அரசு பாஜகவின் நகலாகவே செயல்படுவதாக திமுக விமர்சித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே ‘திருப்பரங்குன்றம் ஆவணப்படம்’ திரையிடத் தடை விதிக்கப்பட்டதும், ‘பக்ரீத் குர்பானி’ கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதும் இந்த அரசின் மதச்சார்பற்ற முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான பின்னணியை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மீது அமலாக்கத் துறை ஏவப்பட்டதற்கு தவெக அரசு கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

 

மாநில உரிமைகளைப் பொறுத்தமட்டில், தமிழ்நாட்டின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடுவதற்கு ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்டு கடிதம் எழுதியதன் மூலம், டெல்லிக்கு முன்னால் மண்டியிட இந்த அரசு தயாராக இருக்கிறது என்ற சிக்னலை கொடுத்துவிட்டதாக திமுக சாடியுள்ளது. பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளில் பாஜகவும் தவெகவும் ஒன்றுதான் என்பதை இந்த ஒரு மாத கால ஆட்சி நிரூபித்துவிட்டதாகவும், இதனால் தவெக-வை ஆதரித்த கட்சிகள் தற்போது வாய்பேச முடியாமல் தவித்து வருவதாகவும் திமுக தனது பதிவில் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளது.