தமிழக அரசு அலுவலகங்களில் இன்னும் மூன்று மாதங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு தீவிரமாக முழங்கி வரும் வேளையில், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறியுள்ள லஞ்சப் புகார் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, “ஜீரோ கரப்ஷன்” (பூஜ்ஜிய ஊழல்) கொள்கையில் மிக உறுதியாக இருப்பதாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூடத் தொட மாட்டேன் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 90 நாட்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதற்கிடையே திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ஒரே நாளில் லஞ்சத்தையும் ஊழலையும் சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்ற யதார்த்தத்தைக் குறிப்பிட்டாலும், தவெக அரசு தொடர்ந்து எடுத்து வரும் தீவிர முயற்சிகளின் மூலம் நிச்சயம் ஒரு நாள் தமிழ்நாட்டில் லஞ்சமில்லாத, நேர்மையான ஆட்சி வழங்கப்படும் என்று மிக உறுதியாகத் தெரிவித்திருந்தார். இப்படி தவெக அரசின் லஞ்ச ஒழிப்பு முழக்கங்களும் எச்சரிக்கைகளும் மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ள இதே சூழ்நிலையில், அரசு ஊழியர் ஒருவர் துணிச்சலாக லஞ்சம் வாங்கி கையும் களவுமாக கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த மூக்காண்டி என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்திற்கான உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலரான (விஏஓ) இதயக்கனியிடம் அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த உரிமத்தைப் புதுப்பித்துத் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று இதயக்கனி கேட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மூக்காண்டி, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் உடனடியாகப் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நேற்று ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மூக்காண்டி, அங்கிருந்த இதயக்கனியின் உதவியாளரான வெங்கடேசனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு ரகசியமாக மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக விரைந்து சென்று, கிராம நிர்வாக பெண் அலுவலர் இதயக்கனி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். புதிய அரசின் லஞ்ச ஒழிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இந்த அதிரடி கைது நடவடிக்கை நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
