கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு போக்குவரத்து ஆணையரகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 3 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றில் கிட்டத்தட்ட 50 சதவீத வாகனங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றன.
இதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கிலும், இனிவரும் நாட்களில் ஒரு ஆட்டோவில் 4 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களின் உரிமம் (லைசென்ஸ்) உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. பெற்றோர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
