பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மாபெரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மாலை நேர வகுப்புகள், தேர்வுப் பணிகள், வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடுப்புப் பயன்கள் போன்றவற்றுக்கான ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படாததால் பேராசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் விளைவாக, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து கல்விப் பணிகளையும் காலவரம்பின்றி புறக்கணிக்கப்போவதாக பேராசிரியர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிந்து உயர் கல்வி ஆணையம் ஜூன் 1 அன்று அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அதில், பல்கலைக்கழகத்தின் நிதிப் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காண 40 நாட்கள் அவகாசம் தேவை என ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், “40 நாள் அவகாசம் எல்லாம் தர முடியாது” என்று கூறி பேராசிரியர்கள் சங்கம் அந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிதி நெருக்கடிக்குத் தற்போதைய நிர்வாகமும், துணைவேந்தரும் தான் முழுமுதற் காரணம் என்று பேராசிரியர்கள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தங்களுக்கு சேர வேண்டிய ஊதியப் பாக்கிகளை உடனடியாக வழங்கக் கோரியும், நிர்வாகச் சீர்கேட்டை சரிசெய்ய வலியுறுத்தியும் பேராசிரியர்கள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் கராச்சி பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
