உங்களுக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..? கருப்பு வசூல் சாதனையைத் தாண்டி ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் நெட்டிசென்கள்…!!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்த ஆண்டின் மிகச்சிறந்த தமிழ் சினிமா வெற்றியாக சாதனை படைத்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி தியேட்டர்களில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பதை கிண்டல் செய்யும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது. படம் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த காப்பிரைட் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர் ஜே பாலாஜி இதற்கு விளக்கமளித்தார். படத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் ‘ரத்தமாரே’ பாடலைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த குறிப்பிட்ட பாடலின் காப்பிரைட் உரிமத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ. 25 லட்சம் கேட்டதாகவும் கூறினார். ஒரு சிறிய காட்சிக்கு அவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்க விரும்பாததால், அவர்கள் அந்த முடிவைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக இளையராஜாவின் காப்பிரைட் விவகாரத்தை நகைச்சுவையாக மாற்றியதாக பாலாஜி ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.

   

பாலாஜியின் இந்த பேட்டி வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்த்து வருகின்றனர். “ஏன் சார், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் உங்களிடம் 25 லட்சம் கேட்டால் கம்முனு காட்சியை மாத்துறீங்க… ஆனா தன் உழைப்புக்கு காப்பிரைட் கேட்கும் ராஜா சாரை மட்டும் படத்துல கிண்டல் செய்றீங்களா? உங்களுக்கு வந்தா ரத்தம், அதுவே ராஜா சார்க்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று வடிவேலுவின் பாணியில் மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.