தமிழ்நாட்டில் நிலங்கள் மற்றும் வீடுகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பலரும் இதில் முதலீடு செய்து வருகின்றனர். ஒரு சொத்து நமக்குத்தான் சொந்தம் என்பதை உறுதிப்படுத்தும் அடிப்படை ஆதாரமே ‘தாய் பத்திரம்’ ஆகும். வீடு அல்லது நிலத்தை விற்பனை செய்தல், வாங்குதல், வங்கிக் கடன் பெறுதல் மற்றும் பட்டா மாற்றம் போன்ற அனைத்து முக்கிய காரியங்களுக்கும் இந்த ஆவணமே முதல் சாட்சியாக நிற்கிறது. ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அது கடந்த காலங்களில் எத்தனை பேரிடம் கைமாறி வந்துள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கும் இந்தத் தாய் பத்திரம் தொலைந்து போனால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
தற்போது தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை ‘STAR 3.0’ போன்ற அதிநவீன திட்டங்கள் மூலம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே தங்களின் பத்திர நகல்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். தாய் பத்திரத்தை ஆன்லைனில் மீட்க, அது பதிவு செய்யப்பட்ட பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் (SRO) போன்ற விவரங்கள் கைவசம் இருக்க வேண்டும். இந்த விபரங்கள் இருந்தால், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnreginet.gov.in என்ற பக்கத்திற்குச் சென்று சான்றளிக்கப்பட்ட நகலை மிக எளிதாகப் பெறலாம்.
இணையதளத்திற்குள் சென்று ‘Certified Copy / View Document’ என்ற பிரிவைத் தேர்வு செய்து, சொத்து அமைந்திருக்கும் மாவட்டம், சார் பதிவாளர் அலுவலகம், பத்திர எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன் பின்னர் ‘Search’ ஆப்ஷனை அழுத்தி, ‘Apply for Certified Copy’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்திய பிறகு, சான்றளிக்கப்பட்ட பத்திர நகலை (Certified Copy) பிடிஎஃப் (pdf) வடிவில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுமார் 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பழமையான தாய் பத்திரங்கள் பல நேரங்களில் ஆன்லைனில் கிடைப்பதில்லை. இத்தகைய சூழலில், காவல் நிலையத்தில் புகார் அளித்து ரசீது பெற வேண்டும். பத்திரம் கிடைக்கவில்லை எனப் போலீஸாரிடம் சான்றிதழ் பெற்றவுடன், வழக்கறிஞர் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்குள் எந்தத் தகவலும் வராவிட்டால் வழக்கறிஞர் தரும் சான்றிதழ், நோட்டரி உறுதிமொழிப் பத்திரம், போலீஸ் எப்ஐஆர் (FIR) நகல் உள்ளிட்ட 5 முக்கிய ஆவணங்களைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, அசல் பத்திரத்திற்கு இணையான சட்டப்பூர்வ நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
