20 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா..? 15,000 ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முடக்கம் ..! தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது..?

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் சுமார் 15,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் “சிறப்பு நிலை ஊதிய உயர்வு” வழங்கும் பணி, கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்ப்புத் தாமதத்தால் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. 2003-2004ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பின்னர் 2006இல் காலமுறை ஊதியப் பிரிவிற்கு மாற்றப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு, 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்த நிலையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், 10, 12ஆம் வகுப்புகள், இளங்கலை, முதுகலை மற்றும் B.ED உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள் இக்கோப்புகளை அங்கீகரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, B.ED சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் அரசுத் தேர்வுத்துறை ஆகியவை கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தச் சரிபார்ப்புப் பணியை மிகத் தாமதமாக மேற்கொண்டு வருவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 20 ஆண்டுகள் எந்தக் களங்கமும் இன்றி உழைத்த பிறகும், தங்களுடைய நியாயமான பொருளாதார மற்றும் வாழ்வாதார உரிமைக்காக அதிகாரிகளின் வாசலில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

   

ஆசிரியர்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதியும் பாதிக்கப்படும்போது, அது வகுப்பறை கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளையும் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் தரத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கும் என்று கல்விச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், சிறப்பு முகாம்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை விரைந்து முடித்து, தகுதியான ஆசிரியர்களுக்கு உடனடியாகச் சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.