“நகை திருட்டு அவமானம்.. வலி தாங்க முடியல”.. மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவனின் பகீர் வாக்குமூலம்..!!

By Muthu Mani on ஆனி 2, 2026

Spread the love

சென்னை மாடம்பாக்கத்தில் 35 சவரன் தங்க நகை திருட்டு போன வழக்கில், போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த வீட்டுப் பணிப்பெண் விஜயா (50) அவரது கணவராலேயே கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயா, சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள சரோஜா என்பவரது வீட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்திற்குள், அங்கிருந்த 35 சவரன் நகைகளுடன் காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்துத் தேடிய சேலையூர் போலீசார், மேல்மருவத்தூரில் தங்கியிருந்த விஜயாவையும் அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் (55) பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு இடைப்பட்ட காலத்தில், போலீசார் தம்பதியினரை வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜென்சி உரிமையாளர் அனந்த பத்மநாபனின் பொறுப்பில் ஒப்படைத்து, அவரது அசோக் நகர் இல்லத்தில் தங்க வைத்திருந்தனர். டிசம்பர் 30 அன்று இரவு அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து விசித்திரமான சத்தம் கேட்டதை அடுத்து, அனந்த பத்மநாபன் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த அசோக் நகர் போலீசார், கழுத்தறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்த விஜயாவின் உடலைக் கைப்பற்றியதோடு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

   

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பன்னீர்செல்வத்திடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகை திருட்டு வழக்கில் சிக்கியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாக தாங்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார். தனது மனைவி கத்தியை எடுத்துக் கொடுத்ததால், முதலில் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகை திருட்டிற்கும் இந்த கொடூரக் கொலைக்கும் இடையே உள்ள பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.