விழுப்புரம் மாவட்டம் அனிச்சான்குப்பம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த 18 வயது இளம்பெண் யான்சி, சென்னையில் உள்ள தனது தோழிகளைப் பார்க்க ராமாபுரம் வந்துள்ளார். சம்பவத்தன்று யான்சியும், அவரது 17 வயது தோழியும் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியின் மதுபான பாருக்குச் சென்றுள்ளனர். அங்கு நுழைவுக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக அர்ஷத் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து ஜோடியாக உள்ளே சென்றுள்ளனர். பாருக்குள் அவர்கள் மது அருந்திவிட்டு நடனமாடியபோது, அங்கிருந்த சில இளைஞர்கள் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் வெடித்துள்ளது.
இதனைத் தட்டிக்கேட்ட அர்ஷத்தையும் அந்த இளைஞர் கும்பல் தாக்கியுள்ளது. மேலும் அந்த வாலிபர்கள் அங்கிருந்த மற்ற பெண்களிடமும் தகராறில் ஈடுபட்டதால், பாரின் பாதுகாவலர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். பாருக்கு வெளியே வந்ததும், அந்தப் பெண்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் விடுவதற்காக அர்ஷத் மற்றும் அவரது நண்பர் என மொத்தம் நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.
அப்போது பாருக்குள் தகராறு செய்த நபர்களின் கார் மீது வேறு சிலர் கல்லை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். ஆனால், இருசக்கர வாகனத்தில் சென்ற அர்ஷத் குழுவினர்தான் கல்லை எறிந்ததாகத் தவறாக நினைத்த அந்த 7 பேர் கொண்ட கும்பல், கோபத்தில் தங்களது காரைக் கொண்டு அர்ஷத்தின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இரண்டாவது முறையாக வேகமாக வந்து இடித்ததில், வாகனத்தில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்தத் கொடூர விபத்தில் யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவரது 17 வயது தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாலகுரு, கல்லூரி மாணவர் கிஷோர் குமார், ஜோஸ்வா, சுமன் உள்ளிட்ட 7 பேரை கோயம்பேடு போலீஸார் கைது செய்து, அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், 18 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் போலியான வயது ஆவணங்களைக் காண்பித்து பாருக்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்த மதுபான பாருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பின் யான்சியின் உடல் அவரது சொந்த ஊரான அனிச்சான்குப்பத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
