குற்றவாளியை என்கவுண்டர் பண்ணுங்க.. இல்ல அரபு நாட்டு தண்டனை குடுங்க.. தமிழக அரசை அதிரவைத்த பிரேமலதா விஜயகாந்த்..!!

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, 12 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதும், 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் மனிதநேயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரமான செயல்கள் என்று அவர் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தொடர் குற்றங்கள் சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தச் சம்பவங்கள் தற்போதைய அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகக் குறைபாட்டையே காட்டுவதாக விமர்சித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மேம்பாடு மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடல் போன்ற வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

   

இவற்றுக்கெல்லாம் விரைவான மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களைத் தடுக்க ‘அரபு நாடுகளில் வழங்கப்படுவதைப் போன்ற பொதுவெளி தண்டனையோ அல்லது என்கவுண்டரோதான் ஒரே தீர்வு’ என்றும், அதனை இந்த அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.