2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் டெல்லி பாஜக தலைமை ‘ஆபரேஷன் ரேடார்’ என்ற ரகசிய உத்தியை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வரித்துறை மூலம் தவெக தலைவர்களின் பழைய மற்றும் புதிய விவகாரங்கள் குறித்த கோப்புகளைத் திரட்டி, ஆரம்பக்கட்டத்திலேயே அரசியல் அழுத்தம் கொடுக்க டெல்லி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வரும் முன்பே அவரது திரைப்பட நிறுவனங்கள் மற்றும் வருமானம் தொடர்பான விவகாரங்கள் மத்திய அமைப்புகளின் கவனத்தில் இருந்தன. குறிப்பாக, 2015-ல் வெளியான ‘புலி’ திரைப்படத்தின் போது நடந்த வருமான வரிச் சோதனைகள் மற்றும் ரூ.1.5 கோடி அபராதம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது இதன் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. மேலும், கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் தொடர்பான புகார்களும் சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்பட்டு, அதற்கான கோப்புகளும் டெல்லிக்குச் சென்றுள்ளதாக உள்விவரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் மட்டுமின்றி, அவரது அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள், அதிமுக போன்ற மாற்றுப் கட்சிகளில் இருந்து வந்து தவெக-வில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பின்னணி விவரங்களும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. இவர்கள் மீதான சொத்துக் குவிப்பு புகார்கள், நிலுவை வழக்குகள் மற்றும் வருமான வரி விவகாரங்கள் அடங்கிய ஒரு பெரிய ரகசிய கோப்பு டெல்லியில் தயார் செய்யப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழகத்தில் தடம் பதிக்க முயலும் பாஜகவுக்கு, அதற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடித்திருப்பது முழு திருப்தியைத் தரவில்லை. இதனால், பிற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் தாமரை’ போன்ற நேரடி அரசியல் தந்திரங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் மறைமுக அழுத்தம் மற்றும் உளவு அரசியல் மூலம் தவெக அரசு தங்களுக்கு எதிராகச் செயல்படாமல் தடுக்க ‘ரிமோட் கண்ட்ரோல்’ முறையில் கட்டுப்படுத்தும் ‘ஆபரேஷன் ரேடார்’ உத்தியை டெல்லி கையாள்வதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
