விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் நடுரோட்டில் தவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் ஒருவருக்கு இப்படிப்பட்ட ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் சொகுசு வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்காக அங்கிருந்த பொதுச் சாலைகள் திடீரென மூடப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டதால், அந்த நபரால் தனது மனைவியை உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்தும், வேறு வழியின்றியும் அந்தப் கணவர், சாலைகளிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நெஞ்சை உருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அரசியல் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுவது போல நாடகமாடுவதாகவும், ஆனால் நிஜ வாழ்க்கையில் தங்களால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “விஐபிக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம்கூட சாதாரண மக்களின் உயிருக்கு இல்லையா? சாமானிய மக்கள் என்ன மனிதர்களே இல்லையா?” என்று நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நிலையைக்கூட உணராமல், அதிகார வர்க்கத்திற்காகச் சாலைகளை மூடும் இத்தகைய அவல நிலை என்று மாறும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் கேள்வியாக உள்ளது.
