உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு, சுமார் 80 அடி உயரமுள்ள மொபைல் கோபுரத்தின் (Tower) மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் உள்ள கோபுரத்தின் மீது ஏறிய அந்தப் பெண், தம்மைக் சீரழித்த குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தும், எஸ்பி மற்றும் சிஓ ஆகிய உயர் அதிகாரிகளைப் பலமுறை நேரில் சந்தித்துக் முறையிட்டும், லக்னோ வரை அலைந்தும் எந்தப் பலனும் இல்லை என்றும், வெளியில் சுற்றும் குற்றவாளி தமக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் (DM) மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அந்தப் பெண் கீழே இறங்கி வந்தார். இச்சம்பவம் நமது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பின் மெத்தனப் போக்கையும், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள தாமதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒரு பெண் தனக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்க, அதிகாரிகளின் வாசல்களில் பலமுறை அலைந்து திரிந்துவிட்டு, இறுதியில் இப்படி கோபுரத்தின் மீது ஏறி உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் மட்டுமே இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற சமூகக் கேள்வியும், பொதுமக்கள் மத்தியிலான கடுமையான ஆத்திரமும் தற்பொழுது எழுந்துள்ளது.
