“பேப்பர் லீக்கால் மாணவர்கள் வாழ்க்கை நாசமாகுது.. ஆனா இவரு  மோடி மாம்பழம் தோட்டம் பத்தி பேசுறாரு..! பவன் கேரா எழுப்பிய சர்ச்சை கேள்வி…!

By Swetha on ஆனி 1, 2026

Spread the love

நாட்டில் நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), சிஇயுஇடி (CUET) போன்ற முக்கியப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து வரும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தத் தொடர் முறேகடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ வானொலி உரையை கடுமையாகச் சாடினார். வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் தற்கொலை போன்ற தீவிரமான தேசியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் மாம்பழ வகைகள், மாங்காய் ஊறுகாய், ஜல்ஜீரா செய்முறை மற்றும் கோடைகாலத்தில் தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்துப் பேசியதாகக் குற்றம்சாட்டினார். நாட்டின் இளைய தலைமுறை ஒரு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியப் பிரதமருக்கு இதுதான் முக்கியப் பணியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

   

மேலும், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியின் சமூக ஊடகப் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், நாட்டை ஆளும் பொறுப்பில் இருக்கும் மோடிக்கு மாம்பழத் தோட்டம் பற்றி பேசவே நேரம் இருக்கிறது என்றும், ஆனால் எதிர்க்கட்சியில் இருக்கும் ராகுல் காந்தி மட்டுமே இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி உண்மையான அக்கறை கொண்டுள்ளார் என்றும் பவன் கேரா குறிப்பிட்டார். வினாத்தாள் கசிவு குறித்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டால், அதற்கு அவர் “ராகுல் காந்தி விரக்தியில் இருக்கிறார்” எனப் பதிலளிப்பதாகவும், தற்போதைய இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதால் ராகுல் காந்தி மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடே விரக்தியில் இருப்பதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.