மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் ஹார்முஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் தீவின் தொலைத்தொடர்பு டவர் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் தாக்குதலுக்குப் பயன்படுத்திய முக்கிய விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு, அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் மூலம் மிகக் கடுமையான பழிவாங்கும் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் ‘பார்ஸ்’ செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பின் விண்வெளி வான்படைப் பிரிவு உடனடியாகக் களமிறங்கியது. அமெரிக்கா பயன்படுத்திய அதே விமானப்படைத் தளத்தின் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தி, திட்டமிட்டிருந்த இலக்குகள் அனைத்தையும் முழுமையாகத் தகர்த்து அழித்துள்ளதாக ஈரான் பாதுகாப்புப் படை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அமெரிக்க வான்படைத் தளம் எந்த நாட்டில் அல்லது எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்ற விபரங்களை ஈரான் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த திடீர் ராணுவ மோதல்களின் எதிரொலியாக, அண்டை நாடான குவைத் தேசத்தில் உச்சக்கட்டப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஈரானின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில் குவைத் முழுவதும் அவசரக்கால சைரன்கள் ஒலித்து வரும் வேளையில், எதிரி நாட்டு ஏவுகணைகள் தங்கள் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க குவைத் ராணுவம் எல்லைப் பகுதிகளில் வான் பாதுகாப்பை முழு வீச்சில் பலப்படுத்தியுள்ளது.
