“பிளாக் பண்ணா விடமாட்டேன்!”.. பெண்ணின் போட்டோவை AI மூலம் ஆபாசமாக மாற்றிய போலி சாமியார்.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!

By Muthu Mani on ஆனி 1, 2026

Spread the love

சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்மீக போர்வையில் ஒளிந்திருந்த ஒரு காமுகனிடம் ஏமாந்து, பின் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு அவனைக் கம்பி எண்ண வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த அப்பெண்ணிற்கு, சமூக ஊடகம் வழியாக சுமித் சர்மா என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் என்று கூறிக் கொண்ட சுமித், ஆரம்பத்தில் கடவுள், தியானம் என மங்களகரமாகப் பேசி அப்பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஆனால், நாளடைவில் தனது சுயரூபத்தைக் காட்டிய அவன், பெண்ணிடம் ஆபாசமாகப் பேச முயன்றதுடன் தன்னோடு நெருக்கமாகப் பழகுமாறும் வற்புறுத்தியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அவனுடனான தொடர்பைத் துண்டித்து, சமூக வலைத்தள பக்கங்கள் அனைத்திலும் அவனை ‘பிளாக்’ செய்துள்ளார்.

தன்னை அந்தப் பெண் புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த சுமித், அதற்குப் பழிவாங்க நினைத்து கொடூரமான செயலில் இறங்கியுள்ளான். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அப்பெண் மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்களைத் திருடிய அவன், ‘ஏஐ’ (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை ஆபாசப் படங்களாகச் சித்திரரித்துள்ளான். அதுமட்டுமன்றி, இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் அப்பெண்ணின் பெயரிலேயே 10 போலி கணக்குகளைத் தொடங்கி, இந்த ஆபாசப் படங்களை இணையத்தில் உலவ விட்டுள்ளார். இதைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் மனமுடைந்து போன நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக அகமதாபாத் சைபர் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

   

வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், டெல்லியில் பதுங்கியிருந்தபடியே அடுத்த பெண்ணை ஏமாற்றத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த சுமித் சர்மாவைத் தட்டித் தூக்கி அதிரடியாகக் கைது செய்தனர். ஆன்மீகத்தின் பின்னால் மறைந்து கொண்டு பெண்களிடம் அடிமட்ட லெவலில் அட்டூழியம் செய்து வந்த இந்த போலி சாமியாரின் கைது சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முன்பின் தெரியாத நபர்களிடம் பழகும் போதும், சமூக வலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களைப் பகிரும் போதும் பெண்கள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.