அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 3.2 கோடி ஆண் கொசுக்களை பொதுவெளியில் விடுவதற்கு கூகுள் நிறுவனம் (அதன் துணை நிறுவனமான வெரிலி மூலம்) அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற ஆபத்தான வைரஸ் நோய்களைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்தி’ (Aedes aegypti) வகை கொசுக்களை ஒழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வகத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்படும் இந்த ஆண் கொசுக்கள், பொதுமக்களைக் கடிக்காது என்பதால் இதனால் மனிதர்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
பொதுவெளியில் விடப்படும் இந்த ஆண் கொசுக்கள், அங்குள்ள பெண் கொசுக்களுடன் இணையும் போது, வோல்பாக்கியா என்ற பாக்டீரியாவின் தாக்கத்தால் உருவாகும் முட்டைகள் யாவும் பொரிக்கும் தன்மையற்றவையாக மாறிவிடும். இதன் காரணமாக, அடுத்தடுத்த தலைமுறை கொசுக்களின் உற்பத்தி முற்றிலும் தடுக்கப்பட்டு, காலப்போக்கில் அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் நோய்க்கிருமிகளைப் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த உதவும் இந்த நவீன தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
