இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சுற்று அரையிறுதியில் மீனாட்சியிடம் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். முன்னதாக, 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய மல்யுத்த சம்மேளனம் அனுமதி மறுத்ததால், உச்ச நீதிமன்றம் வரை சென்று வினேஷ் போகத் இந்த தகுதிச் சுற்றில் பங்கேற்றார். முதல் இரு சுற்றுகளில் வெற்றி பெற்ற அவர், அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார்.
தோல்விக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், தான் விரைவில் சாக வேண்டும் என்று மல்யுத்த சம்மேளனம் நினைப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தான் தோற்றபோது சம்மேளன அதிகாரிகள் கொண்டாடியதாகவும், தான் ஒற்றையாளாக ஒட்டுமொத்த சம்மேளனத்திற்கு எதிராகப் போராடியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பின்னடைவுகள் தனது இலக்கை இன்னும் வலுவாக்கும் என்றும், மீண்டும் களமிறங்கி விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுப்பேன் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
