2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மே 31) நடைபெற உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு (2025) வரலாற்றிலேயே முதன்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில், இந்த சீசனிலும் அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆர்சிபி அணியின் தற்போதைய கேப்டன் ரஜத் படிதார், விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘தி ஃபைனல்’ (The Final) என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த உருக்கமான பதிவு, விராட் கோலியின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளதால் ஆர்சிபி ரசிகர்கள் கடும் கலக்கமடைந்துள்ளனர். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2008-ஆம் ஆண்டிலிருந்து ஒரே அணிக்காக விளையாடி வரும் கோலி, நாளை நடக்கும் இறுதிப் போட்டியுடன் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், நாளைய இறுதிப் போட்டியில் ஆர்சிபி மீண்டும் கோப்பையை வென்று கோலிக்கு ஒரு பிரம்மாண்ட வழிஅனுப்புதலைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
