பிக் பாஸ் புகழ் ஜூலி மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர்களுக்கு இடையேயான கருத்து மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து ஜூலி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், அது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜூலி, சமூக வலைதளங்களில் தனக்கு விடுக்கப்பட்ட ஆபாசமான மிரட்டல்களாலும், ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தாலும் தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தையை இழந்துவிட்டதாகக் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டியது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், ஆரம்பத்திலிருந்தே ஜூலியின் கருத்துகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சின்னத்திரை நடிகர் அருண்ராஜன், தற்போது ஜூலியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், “தவெக-வால்தான் உங்களுடைய கரு கலைந்ததா? நாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அக்கட்சியையும் அதன் தலைவர் விஜயையும் விமர்சித்த ஒரே பெண் ஜூலி மட்டுமல்ல என்றும், மற்ற பெண்களுக்குக் கருத்து ரீதியாக மட்டுமே தவெக தரப்பில் பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூலி வெளியிட்ட கடுமையான கருத்துகளுக்கு மக்கள் கொடுத்த எதிர்வினையை, ஒட்டுமொத்தமாக தவெக மீது சுமத்துவது முறையல்ல என்று வாதிட்டுள்ள அருண்ராஜன், இதில் சட்ட ரீதியான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். தம்மீது உட்பட எட்டு பேர் மீது ஜூலி புகார் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கும் தெரியும். நீங்கள் ஒரு பெண், இப்போதுதான் உங்களுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது என்பதற்காகவே நாங்கள் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவின் நிறைவாக, “இதோடு உங்கள் நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் பேசிவிட்டுப் பெண் என்ற அடையாளத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்” என அருண்ராஜன் காட்டமாக எச்சரித்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒருதரப்பினர் ஜூலியின் நிலைக்கு ஆதரவாகப் பேசி வர, மறுதரப்பினர் அருண்ராஜனின் வாதத்தை ஆதரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அருண்ராஜனின் இந்த நேரடி எச்சரிக்கைக்கு ஜூலி தரப்பு சட்ட ரீதியாகப் பதிலடி கொடுக்குமா அல்லது மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது.
