கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் முக்கிய வழித்தடமான ‘ஹார்மூஸ் நீரிணையை’ மூடியது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள் மற்றும் உணவகப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தச் சூழலில், போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பதற்கான தற்காலிக ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க துணை அதிபர் ஜேடி லான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் சில அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளதால், டிரம்ப் இதில் கையெழுத்திடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறுபுறம், இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப், தாங்கள் சலுகைகளைப் பேச்சுவார்த்தை மூலம் பெறவில்லை என்றும், ஏவுகணைகள் மூலமே பெறுகிறோம் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அடுத்த நாளே போருக்குத் தயாராக இருப்பவரே வெற்றியாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இத்தகைய மோதல் போக்கினால் வளைகுடா பகுதியில் மீண்டும் அமைதி திரும்புமா என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
