“என் முதல் கையெழுத்தே இதுக்குத்தான்!”.. அரசுப் பள்ளிகளில் அதிரடி மாற்றம்.. செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!!

By Muthu Mani on வைகாசி 30, 2026

Spread the love

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் துவக்கி வைத்தார். புதிதாக இணைந்த மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,52,625 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாகவே அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை உள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், பள்ளிகளில் பூட்டப்பட்ட கழிப்பறைகள், குடிநீர் மற்றும் வகுப்பறை வசதிகளை மேம்படுத்துவதே தனது முதல் கையெழுத்து என்றும், திட்டங்கள் அனைத்தும் 100 சதவீதம் பயனாளிகளைச் சென்றடைவதை அரசு கண்காணித்து வருவதாகவும் உறுதியளித்தார்.

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை என்பது மாணவர்களின் டிஎன்ஏ-விலேயே (DNA) கலந்தது என்றும், ஆங்கில வழிக் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மாநில நலனை முன்னிறுத்தியே முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார் எனக் குறிப்பிட்ட அவர், ஓராசிரியர் பள்ளிகளின் நிர்வாக மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளைக் கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவர்களுக்கு ஏதேனும் பாலியல் தொல்லைகள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில், பாடப் புத்தகங்களிலேயே இலவச அலைபேசி எண்கள் அச்சிடப்பட்டு, அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.