தமிழக சட்டசபை தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக). முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், தவெகவைச் சேர்ந்த 30 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆகிய கூட்டணிக் கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 34 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் சென்னையில் தங்கி தங்களது துறை சார்ந்த பணிகளைக் கவனிப்பதற்காக அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகளைப் பொதுப்பணித்துறை முடுக்கிவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்களாக்களில், முதற்கட்டமாக 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு ‘முல்லை’ பங்களாவும், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திற்கு ‘தாமிரபரணி’ பங்களாவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு ‘ரோஜா’ பங்களாவும் என 22 பேருக்குத் தனித்தனியே இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாணையின்படி, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த அரசு பங்களாக்கள் அனைத்தும் முற்றிலும் வாடகை இல்லாத அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த அரசு பங்களாக்களில் அமைச்சர்கள் குடியிருக்கும் காலம் வரை, தங்களது தனிப்பட்ட வீட்டு வாடகைப்படியை (HRA) அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் அந்த அரசாணையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 22 பேருக்கு மட்டுமே தற்போது பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட்ரமணன், டிகே பிரபு, கீர்த்தனா, ராஜ்மோகன் உள்பட இன்னும் 13 பேருக்கு இன்னும் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் பொதுப்பணித்துறை தரப்பில் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் பின்னணியில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட ஒருசில மூத்த அமைச்சர்களுக்குச் சொந்தமாகவே சென்னையில் பங்களாக்கள் மற்றும் வீடுகள் இருப்பதால், அவர்கள் தங்களின் சொந்த இல்லங்களிலிருந்தே அரசுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சில பங்களாக்களில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருவதாலும் இந்தத் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாத இந்த 13 அமைச்சர்களும், அவர்கள் தற்காலிகமாகத் தங்கும் இடங்களுக்கான வாடகைப்படியை அரசின் விதிமுறைகளின்படி பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
