அமெரிக்காவின் ஒரு வீதியில் அல்லது வாகன நிறுத்தத்தில் இந்திய வம்சாவளித் தம்பதியினர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த அமெரிக்க நபர் ஒருவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தத் தம்பதியினரும் புன்னகையுடன் “ஆம்” எனப் பதிலளித்துள்ளனர். தொடர்ந்து அந்த நபர், “இந்தியா சிறந்ததா அல்லது அமெரிக்கா சிறந்ததா?” என்று கேள்வியெழுப்ப, அதற்கு அவர்கள், “இரண்டு நாடுகளுமே மிகச் சிறந்தவை, இந்தியாவில் எங்களது குடும்பத்தினர் இருக்கிறார்கள்” என்று மிகவும் பக்குவமாகப் பதிலளித்தனர்.
அந்தத் தம்பதியினரின் அமைதியான பதிலைக் கேட்ட அந்த அமெரிக்க நபர் திடீரெனத் தனது குரலை உயர்த்தி ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கினார். “இந்தியா அவ்வளவு சிறந்தது என்றால் நீங்கள் ஏன் இந்தியாவிலேயே இருக்கக் கூடாது, ஏன் அமெரிக்காவிற்கு வர வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “உலகைச் சுற்றிப் பார்ப்பதற்காக” என்று பதிலளித்ததும், அந்த நபர் கோபத்தின் உச்சத்துக்கே சென்று, “இல்லை, நீங்கள் இங்கு இருக்கக் கூடாது. உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள். என் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் (Get the f*** out of my country)” என மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் இனவெறியுடன் கத்தியுள்ளார்.
https://twitter.com/i/status/2057130312639860940
இனவெறியுடன் தாக்குதல் நடத்திய அந்த நபரே இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், இது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கோபப்படாமல் அமைதியாகவும் கண்ணியமாகவும் கையாண்ட இந்தியத் தம்பதியினரை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இனவெறித் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
