ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு சுமார் 10 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இளம் வீரர், மைதானத்தில் முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை அநாயசமாக சிக்சருக்கு பறக்கவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். குறிப்பாக, அண்மையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்த சூர்யவன்ஷி, மிகக் குறைந்த வயதிலேயே தனது அசாத்திய திறமையால் பெரும் புகழையும் செல்வத்தையும் ஈட்டியுள்ளார்.
சூர்யவன்ஷியின் இந்த 10 கோடி ரூபாய் சொத்து மதிப்புக்கு அவரது ஐபிஎல் வருமானம், பரிசுத்தொகைகள் மற்றும் சொத்துக்கள் முக்கியக் காரணமாகும். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், ஆண்டுக்கு ரூ.1.1 கோடி சம்பளமாகப் பெறுகிறார். இது தவிர, ஒவ்வொரு போட்டிக்கும் தலா ரூ.7.5 லட்சம் கட்டணமாகப் பெற்று இதுவரை மொத்தம் ரூ.1.65 கோடி ஈட்டியுள்ளார். மேலும், ரூ.17 லட்சம் மதிப்புள்ள டாடா கர்வ் (Tata Curvv) இவி கார், பீகார் அரசிடமிருந்து ரூ.50 லட்சம் பரிசுத்தொகை, மும்பையில் உள்ள ரூ.2.5 முதல் 3 கோடி மதிப்புள்ள ஆடம்பர அபார்ட்மெண்ட், பீகாரில் உள்ள பூர்வீக வீடு மற்றும் பல்வேறு விளம்பர ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலம் அவரது சொத்து மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த இளம் சாதனையாளரின் வெற்றிக்கு பின்னால் அவரது தந்தையின் மிகப்பெரிய அர்ப்பணிப்பும், குடும்பத்தின் பக்கபலமும் உள்ளது. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற தனது சொந்தக் கனவை வறுமையால் கைவிட்ட சூர்யவன்ஷியின் தந்தை, தனது மகனை எப்படியாவது பெரிய வீரராக்க வேண்டும் என்பதற்காகத் தங்களது குடும்ப சொத்துக்களைக் கூட விற்றுப் பயிற்சி அளித்துள்ளார். மேலும், சூர்யவன்ஷி பயிற்சி பெற வீட்டிலேயே பிரத்யேக வலைப்பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளார். இவருடன் பிறந்த 4 சகோதரர்களில், மூத்த அண்ணன் உஜ்வால் வீட்டின் நிதிப் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்வதால், சூர்யவன்ஷியும் அவரது தந்தையும் எவ்வித அழுத்தமும் இன்றி கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த முடிந்துள்ளது.
